மலரும் ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறோம். சில தீர்மானங்கள் செய்து கொள்கிறோம்.
“இந்த ஆண்டு சொந்தத் தொழிலைத் தொடங்கப் போகிறேன்.”
“இந்த ஆண்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லப் போகிறேன்.”
“இந்த ஆண்டு எனது கனவு வீட்டைக் கட்டப்போகிறேன்.”
“இந்த ஆண்டு உலகம் புகழும் மகத்தான கதை ஒன்றை எழுதப் போகிறேன்.”
“இந்த ஆண்டு அளவோடு சாப்பிட்டு கொடி போல உடலை வைத்துக் கொள்ளப் போகிறேன்.”
இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒரு தீர்மானம் செய்கிறோம். நல்ல தீர்மானங்கள்! நல்ல நோக்கம்.
அடுத்த ஆண்டு தொடங்கும்போது பார்த்தோமானால் இதே தீர்மானங்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்! அதாவது இந்த ஆண்டு முழுவதும் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் நாம் முன்னேறவில்லை. அதை அடைய நாம் எதையும் சாதிக்கவில்லை. ஆங்கிலத்திலே சொல்வார்கள். “மீண்டும் முதல் படியில்!” என்று. முதல் படிக்கே திரும்பத் திரும்ப வந்தோமானால் நாம் எப்படி முன்னேறுவது?
ஒரு அமைச்சர் மரம் நட வந்தார். மரம் நட்டார். தண்ணீர் ஊற்றினார். ஒரு சந்தேகம் வந்தது. "நான் நடும் மரத்தை பத்திரமாக பாதுகாத்து வளர்ப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார்.
"அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் எந்த அமைச்சர் வந்தாலும் இங்கேதான் நடுகிறார். நாங்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்!" என்று சொன்னார்கள்.
எப்படிக் கதை!
செடி நடும்போது மாத்திரம் தண்ணீர் ஊற்றினால் எப்படி வளரும், செடி? எப்படி வளர்ந்து மரமாகும்?
இதுதான் பலருடைய கதை!
வேகம் இல்லை!
வெகு தீவிரமாக ஆர்வத்துடன் தீர்மானம் செய்கிறோம். வைராக்கியத்துடன் சொல்லிக் கொள்கிறோம். "நாளையிலிருந்து நான் புது மனிதன்!" என்று. ஓரிரு நாள் அந்த நினைப்பு நம்முடன் இருக்கிறது. ஆனால், நாம் தொடர்ந்து புது மனிதனாக ஆக, கவனத்துடன் இருப்பதில்லை. முதலில் இருந்த வேகம் இப்போது நம்மிடம் இருப்பதில்லை. ஆரம்ப சூரத்தனத்துடன் சரி. பிறகு முயற்சிகளை விட்டு விடுகிறோம்.
"இந்த ஆண்டு எம்.பி.ஏ. நிர்வாகப் படிப்பு படிக்கப் போகிறேன். அதுவும் தபால் மூலம் சொல்லித் தருகிறார்கள். நிர்வாகம் பற்றி படித்தால் தான் நாளை சொந்தத் தொழிலில் இறங்கலாம்" என்று நல்ல தீர்மானம் எடுப்போம். அல்லது -
"தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். பதினாறு பெரிய மாநிலங்களில் ஒரு மாநிலம். பணம் புரள்வதெல்லாம் பம்பாயில், பஞ்சாபில், குஜராத்தில். எனவே நான் அங்கே போய் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளப் போகிறேன். அவர்களுக்கு வேண்டியதை தயார் செய்யப் போகிறேன்."
இப்படி ஒரு வியாபாரி தீர்மானம் செய்கிறார். ஆனால் அதில் அவர் முனைகிறாரா தொடர்ந்து அதை முடிக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. திறந்த சோடா பாட்டில் போல பல ஆசைகளையும் தீர்மானங்களையும் புஸ்வாணமாக்கி விடுகிறோம்!
நாம் எங்கே தோற்றுப் போகிறோம்? எதனால் தோற்றுப் போகிறோம்?
நம்மிடம் சுய கட்டுப்பாடு இல்லை. தொடர்ந்த ஈடுபாடு இல்லை. குறிக்கோள் கடைசிவரை நிற்பதில்லை. கண்காணிப்பு இல்லை. கவனம் வேறு எதில் எல்லாமோ சென்று நமது குறிக்கோளை திசை திருப்பி விடுகின்றன. நம் கவனமெல்லாம் முயற்சி இன்றி, ஆர்வமின்றி, ஆற்றலின்றி, உழைப்பின்றி, மங்கி மடிந்துவிடுகிறது. இதுதான் குறிக்கோளை எட்டமுடியாததற்கு காரணம்.