நாம் தமிழர்-பாரதிதாசன்





தமிழன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!





தமிழர் முரசு

உயர்வென்று கொட்டுக முரசே -- நல்ல
உண்மைத் தமிழர்கள் வாழ்வு!
அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவி
ஆளப் பிறந்தவன் தமிழன்.
உயர்வென்று கொட்டுக முரசே!

அயல் என்று கொட்டுக முரசே!-- உற
வான திராவிடர் அல்லார்!
துயர் செய்ய எண்ணிடும் பகைவர் -- திறம்
தூள் என்று கொட்டுக முரசே!
உயர்வென்று கொட்டுக முரசே!

அறிவுள்ள திராவிடர் நாட்டில் -- சற்றும்
ஆண்மை யில்லாதவர் வந்து
நமர்பசி கொள்ள நம்சோற்றை -- உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்.
உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்நாடு தமிழருக் கென்றே -- இந்தச்
சகத்தில் முழக்கிடு முரசே!
நமைவென்ற நாட்டினர் இல்லை -- இதை
நாற்றிசை முற்றும் முழக்கு!
உயர்வென்று கொட்டுக முரசே!
0 Responses

முகப்புத்தக விருப்பு