மனம்


இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடாத்த நாம் எருமை மாடுகள் போல் இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.

நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்ப வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவரினதும் இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம். நம் பிரக்ஞையின்றி நம் மனதிலிருந்து தான்தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது. நம் மனம் எப்பொழுது தான்தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்
நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.

மனம் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.

நம் பிரஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.
பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (subunconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)
என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும்.
இவை ஒவ்வொன்றும் நம் கடந்தகாலங்கள். நம்மால் அடக்கப்பட்டவை. ஒதுக்கப்பட்டவை. முடியாது தவிர்க்கப்பட்டவை என்று நிறையவிடயங்கள்
நம் ஆழ்மனதில் நம் பிரக்ஞையின்றி நமக்குள் வாழ்கின்றன. தேவையான நேரங்களில் இவைதான் நம்மை தவறாக வழிநடத்துகின்றன. சிலவேளைகளில் ஒரு செயலை செய்து முடித்தவுடன் ஏன் இப்படி செய்தோம் என பிரக்ஞையுடன் கவனிக்கும் பொழுது நமக்கு புரியலாம் பிரக்ஞையின்றி செயற்பட்டிருக்கின்றோம் என்பது.

காலம் கடந்து அதற்காக வருந்துவோம். இவ்வாறு வருந்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு கணமும் பிரக்ஞையுடன் செயற்படுவோமாயின் வாழ்வோமாயின் இந்த மனங்கள், ஆழ்மனங்கள் நம்மை ஆதிக்கம் செய்யமுடியாது.

மனதை பிரக்ஞையுடன் கவனிக்கும் பொழுது
சில விடயங்களை அவதானிக்கலாம்.
மனம் எப்பொழுதும் கடந்தகாலத்தில் அல்லது
எதிர்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
நிகழ்காலத்தில் ஒருபோதும் வாழாது.
இக் கணத்துடன் மனதிற்கு எந்தவிதமான உறவும் இல்லை.
இக் கணம் நாம் பிரக்ஞையுடன் இருப்போமாயின்
மனம் இருக்காது. இயங்காது.

மனதிற்கு நினைவுகளாக கடந்தகாலங்கள் தேவை.
மனதிற்கு கற்பனைகளாக எதிர்காலங்கள் தேவை.
கடந்த காலமும் இல்லாமல் எதிர்காலமும் இல்லாமல்
மனதிற்கு இருப்பே இல்லை. ஏனனில் இக் கணம் மிகவும் சிறியது.
இதில் மனதிற்கு ஒரு வேலையும் இல்லை.

உடலுடனான எங்கள் உறவு பற்றே (attachement) மனம்.
இது இன்னுமொரு பரிமாணம். இந்த உடலினுடாக உலகத்தில் வாழ்கின்றோம். ஆசைகள் கோவங்கள் காதல்கள் வெறுப்புக்கள் பொறாமைகள் எனப் பல விடயங்கள் மனதில் வாழ்கின்றன.

மனம் சிறந்த இரசாயன கணனி. சரியாகவும் நன்றாகவும் நாம் பயன்படுத்தினால் இதன் பலன் அதிகம். மனம் போன போக்கில் போகாமல் மனதை நாம் வழி நடாத்தவேண்டும். நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு வழி என்ன?

பிரங்க்ஞையுடன் மனதைக் கவனிப்பது.
நம் எண்ணங்களைக் கவனிப்பது.
அவற்றுடன் நம்மை அடையாளப்படுத்தாது கவனிப்பது.
இவற்றுடன் நம்மை அடையாளப்படுத்துவது என்பது
இதற்கு நாம் சக்தியை வழங்குகின்றோம் என்பதாகும்.
மாறாக இந்த எண்ணங்களுடன்
நாம் ஓத்துழைக்காமல் விடுவோமாயின்
அவற்றுக்கு வாழ்வு இல்லாது போய்விடும்.
நம் சக்தி தேவையற்று வீணடிக்கப்படாது.
இச் சக்தி நம் ஆரோக்கியமான
படைப்பாற்றலை நோக்கிச் செல்கின்றது.
ஒரு நிமிடம் எங்களால் நம் மனதைத் தொடர்ந்து,
அதனுடன் நம்மை அடையாளப்படுத்தாது
கவனிக்க முடியுமாயின்,
நாம் நம்முள் செல்வதற்கான
முதற்படியில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
தொடர்ந்தும் கவனிப்போமாயின் எண்ணங்கள் இறந்துவிடும்.
நாம் மனதுக்கு அப்பால் (no-mind ) சென்றுவிடுகின்றோம்.
இது ஒரு தியான முறை.
நாம் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு
ஆனந்தமாக வாழ்வதற்கும் இது வழிசெய்கின்றது.
இலகுவான செய்முறை. ஆனால் கஸ்டமானது.
தொடர்ச்சியானதும் ஆழமான பயிற்சியும் தேவை.

சோக்கிரட்டீஸ் மனதை அதன் உச்சத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.
அதனால் தான் உண்மையை அறிவதற்காக தான் மரணிக்கும் சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை.

ஐன்ஸ்டைன் தன் பிரக்ஞையால் முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார். முக்கியமாக அணுச் சக்தியைக் கண்டு பிடித்தார். ஆனால் அவரது பிரக்ஞையற்ற மனதால் அணு குண்டைப் பயன்படுத்தி அழிவுக்கு வழிகாட்டினார். காலம் கடந்து அதற்காக அவரால் வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஆகவே மனம் என்ற உறுப்பில் எந்த தவறும் இல்ல.
இதை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதில் தான்
நம் வாழ்க்கை மட்டுமல்ல நாமும் உயர்கின்றோமா தாழ்கின்றோமா என தீர்மானிக்கப்படுகின்றது.
மனதை சரியான வழியில் பயன்படுத்தக்கூடிய
வழிநடாத்தக்கூடிய ஒரே சக்தி.
நம் பிரக்ஞை மட்டுமே
0 Responses

முகப்புத்தக விருப்பு