ஹெலன் கெல்லர் (Helen Keller)


ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர்அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
1887ஆம் வருடம், ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அவர், அவர்களை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். அங்கே ஆன் சல்லிவன் என்ற பெண்ணை கெல்லரின் ஆசிரியராக நியமித்தனர். அடுத்த 49 ஆண்டுகள் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1904ஆம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். 1900ஆம் வருடம், ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து 1904 ஆம் வருடம் பட்டம் பெற்றார். கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காது கேளாத, கண்பார்வையற்ற மனிதர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹெலன் கெல்லர், ஊனமுற்றோர் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.
ஹெலன் கெல்லர், 1968ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள், தன் 87ஆம் வயதில் இறந்தார்
0 Responses

முகப்புத்தக விருப்பு