கல்லும் சிலையும்


நடமாட்டம் குறைந்த
மாபெரும் நகரின் கடைத்தெரு!
வருவோர் போவார் எல்லோர்க்கும்
இடைஞ்சலாய் கிடந்தது ஒரு பாறாங்கல்!
யாராவது இக்கல்லை எடுத்துப் போக மாட்டார்களா
என்பதே கடைக்காரர் விருப்பம் - அவர்
விருப்பம் நிறைவேற்றிடவே வந்தார்
வழிப்போக்கர் ஒருவர் கடையருகில்!
“ஐயா! இக்கல்லை எனக்குக் கொடுத்து உதவுகிறீரா?”
வழிப்போக்கர் வினவினார் கடைக்காரரிடம்.
மனமகிழ்வுடன் தலையசைத்தார் கடைக்காரர்
விருப்பம் நிறைவேறுதலை யார்தான் மறுப்பார்?
தெருவில் கிடந்த பாறாங்கல்லைத்
தொட்டு வணங்கி எடுத்துப்போனார் வழிப்போக்கர்.
ஆறுமாதம் தவமும் உழைப்பும் தொடர்ந்தது.
அழகிய சிலை ஒன்று உருவானது!
அற்புத அழகுடன் சிலை வடித்த
அந்த வழிப்போக்கர் - சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ!
மனதில் நினைத்தாலே கரம் குவியும் - அம்
மகானின் சிலை வடிவம் - இயேசு பெருமான்!
இயேசு பெருமான் சிலை காட்சிக்கு வந்தது
இதயத்துடிப்புடன் போட்டி நடந்தது - சிலை வாங்கிட!
இறுதியில் கடைக்காரர் வென்றார் - அதிக விலையை
ஈந்து இயேசு பெருமான் சிலையை வாங்கினார்!
சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவிடம் கடைக்காரர்
சிரம் தாழ்ந்து கேட்டார் - இச்சிலை
வடிக்க மூலக்கல் எங்கேயிருந்தது பெற்றீர்?
வணங்கிச் சொன்னார் சிற்பி நடந்தவற்றை!
கடைக்காரர் பார்வையில் பாறாங்கல் - தடைக்கல்
சிற்பியின் பார்வையில் பாறாங்கல் - சிலை!
மூலப்பொருள் ஒன்றுதான்; பார்வைதான் வேறு
முக்கியம் இங்கே மனதின் பார்வைதான்!
பார்வை மாறினால் பாதை தெரியும்
பாதை தெரிந்தால் பரிசுகள் குவியும்;
அகமாற்றம் அற்புதம் விளைவிக்கும் - கல்லும்
அற்புதச் சிலையாகும் அல்லவா?
புற மாற்றம் தற்காலிகம் - என்றும்
அக மாற்றமே நிரந்தரம்! - கல்லும்
சிலையாகும் - இதனால் பொன்னும் பொருளும்
சிறப்பும் மகிழ்வும் சேர்ந்தேவரும் - உண்மை!
0 Responses

முகப்புத்தக விருப்பு